Friday 24 June 2011

மதுரையில்அழகர் கோவில்........

                இன்று அனைத்து அன்பர்களாலும் அன்பாக அழைக்கப்படும் அழகர் கோவில் எனப்படும் "அழகர் மலை" தூங்க நகரம் மற்றும் கோவில் மாநகரம் என்ற பெருமைக்குரிய மதுரையிலிருந்து வடக்கே 40 கி.மீ. தூரத்தில் இருகின்றது. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலைக்கு "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பல பெயர்களும் உண்டு. இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் "அழகர்" என்றும் வடமொழியில் "சுந்தரராஜன்" என்றும் சொல்லப்படுகின்றார். மேலும் இவரை "கள்ளழகர்" என்றும் செல்லமாக அழைப்பதுண்டு. 


                பாண்டிய நாட்டில் அரசாட்சி தோன்றிய முதல் அழகர் கோவிலும் அதனை அடுத்து உள்ள அழகாபுரி என்ற ஊரும் புகழ் பெற்றவையாக இருந்தன. அழகாபுரியைச் சுற்றயுள்ள கோட்டை மதிலுக்குள் அழகர் கோவிலும் அடங்கி இருக்கின்றது. இன்றும் இம்மதிலின் சிதைந்த பகுதிகள் அதன் பெருமையினை உலகுக்கு உணர்த்தி வருகின்றன. 

திருவிழா:

                   சி்த்திரைத் திருவிழா - 10 நாட்கள் ஆடிப் பெருந்திருவிழா - 13 நாள் ‌ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாள் இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது:

                                           அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில்  உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள்.மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார்.   இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் "கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், "வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.

சிறப்பு தகவல்: 

                 மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா தமிழகத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும். இதில் மீனாட்சிக்கு திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்  கண்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக கழியும் என்பது நம்பிக்கை.

                  அழகர் ஆற்றில் இறங்குதல்: மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமே, இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவ' அதாவது "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ' என சாபமிட்டார்.

              சாபம் பெற்ற சுதபஸ், ""துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லை. எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்,'' என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,'' என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.

அழகரின் அபூர்வ வரலாறு:
               ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன்.  சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து ""வேண்டியதை கேள்'' என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள்  நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் "அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

திறக்கும் நேரம்:
           காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.